கன்னியாகுமரியில் கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி இரவு ஆழ் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஓகி புயலில் சிக்கினார்கள்.
அவர்களை மீட்க அரசு தரப்பில் உரிய நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்காததால் மூன்று நாட்களாக கடலில் உண்ண உணவின்றி, உயிருக்குப் போராடி, ஏராளமான மீனவர்கள் கடலில் நீந்தியே கரை வந்து சேர்ந்தனர்.
அதே வேளையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 164 பேர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த 204 மீனவர்கள் கடலில் பலியானார்கள். அந்த துயர சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று கன்னியாகுமரி வீரர்கள் தினமாக அனுசரிக்கபட்டது.
அந்தவகையில் குளச்சல் மீன் பிடி துறைமுகத்தில் அப்பகுதி மீனவர்கள் குடும்பங்களுடன் வருகை தந்து, புயலில் இறந்த மீனவர்களின் புகைப்படங்களுக்கும், கடலுக்கும் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இனிமேல் இது போன்ற புயல்கள் வந்தால் மீனவர்களை காப்பாற்ற, குமரி மாவட்டத்தில் தொலை தொடர்பு மையம் அமைக்க வேண்டும். படகுகளில் செல்லும் மீனவர்களைத் தொடர்பு கொள்ள சேட்டிலைட் ஃபோன் வசதி, கடல் ஆம்புலன்ஸ் என பல்வேறு வசதிகளை அமைக்கக் கோரி தெற்காசிய மீனவ கூட்டமைப்பு தலைவர் அருட்பணியாளர் சர்ச்சில் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கலைவாணர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை