கன்னியாகுமரி: நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (செப்.22) நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அதிகாரிகள், மாவட்டம் முழுவதும் உள்ள மீனவ அமைப்பு பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், ஆட்சியர் ஸ்ரீதர் மீனவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து மீனவர்கள் கூறியதாவது, “தமிழ்நாடு அரசு மீனவர்களுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால் அந்த நிதியை முறையாக செயல்படுத்தாததால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படுகிறது. கோவளத்தில் தற்போது தூண்டில் வளைவு அமைக்க 17 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த தூண்டில் வளைவை நேராக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதற்கு மாறாக தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வருவதால் மீனவர்கள் பாதிக்கப்படக்கூடிய சூழல் உள்ளது. எனவே அந்த தூண்டில் வளைவு பணியை நிறுத்துவதுடன் நேராக தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து மற்றொரு மீனவரின் சகோதரர் பேசுகையில், “எனது சகோதரர் வெளிநாட்டில் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்டபோது உடனடியாக மாவட்ட நிர்வாகமும், அமைச்சர்களும் நேரடியாக வந்து உரிய நிவாரணங்கள் வழங்கப்படும், மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.
ஆனால், ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தனர். அந்த நிவாரணம் எங்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே இந்த நிவாரணம் எங்களுக்கு வேண்டாம் என்று நாங்கள் கூறியிருந்தோம். இந்த நிலையில் தற்போது எங்களுடைய வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனது சகோதரர் படுகொலை செய்யப்பட்டதற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். எனது சகோதரர் படுகொலை செய்யப்பட்டதற்கான உடற்கூராய்வு அறிக்கை வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், தற்கொலை செய்து கொண்டதாகவே வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
3 மாதங்களாக நித்தரவிளை காவல் துறையினர் அந்த உடற்கூராய்வின் அறிக்கையை தராமல் வைத்துள்ளனர். எனவே நித்திரவிளை காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தோனேசியா காவல் படையினருக்கு நித்திரவிளை காவல் துறையினர் ஆதரவாக இருப்பது போன்று தோன்றுகிறது. எனவே, உடனடியாக எனது சகோதரர் வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கும் இந்த அரசு வெளிநாட்டில் எனது சகோதரர் படுகொலை செய்யப்பட்டதற்கு ரூ.3 லட்சம் வழங்கியிருப்பது வேதனையாக உள்ளது. எனது சகோதரர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நான் ஆளுநரையும், மீன்வளத் துறை ஆணையரையும் சந்தித்து பேசியுள்ளேன். இது தொடர்பாக 210 மனுக்கள் இதுவரை அளித்துள்ளேன்.
இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் காலம் கடத்தினால் என்னால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. ஒரு மாத காலத்திற்குள் கொலை வழக்காக மாற்றுவதுடன் உரிய நிவாரணம் வழங்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன்” எனக் கூறினார்.
பின்னர், ஆட்சியர் ஸ்ரீதர் கூறுகையில், “கோவளம் பகுதியில் தூண்டில் வளைவு அமைப்பதற்கு ஏற்கனவே திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. தூண்டில் வளைவு பணியை நீட்டிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.
இது தொடர்பாக மறு திட்ட மதிப்பீடு தயாரித்து தான் அந்த பணியை மேற்கொள்ள முடியும். தூத்தூர் மீனவர் மரிய ஜஸ்டின் உயிரிழந்தது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இதையும் படிங்க: எஸ்பிஐ வங்கியில் திடீர் தீ விபத்து! பணம், முக்கிய ஆவணங்கள் சேதமா?