கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கீழ சங்கரன் குழி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (23). இவர் எரும்பு காடு பகுதியில் உள்ள தனியார் மீன்வலை கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்துவந்தார்.
இந்நிலையில், விஜய் கம்பெனியில் பணி முடிந்த பின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி அவர் தனது இருசக்கர வாகனத்தை சாலையோரமாக உள்ள மதில் சுவரில் மோதியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின் இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விஜய்யின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விஜய் வந்த இருசக்கர வாகனம் மதில் சுவரில் மோதியபோது அவர் மறு திசையில் தூக்கி வீசுவது போன்ற காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.