கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கரியமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (49). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு, சுப்புலட்சுமி என்ற மனைவியும், விக்னேஷ் (20), சரவணன் (17) ஆகிய இரு மகன்களும் இருந்தனர். இவர்களில் மூத்த மகன் விக்னேஷ் ஆடிட்டிங் அலுவலகத்தில் வேலை பார்த்துவந்தார். இளைய மகன் சரவணன், அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்தார்.
இந்நிலையில், செல்வராஜ் மற்றும் சரவணன், விக்னேஷ் ஆகிய மூவரும் கேரள மாநிலம் கொல்லம் அருகே கடைக்கல் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தனர். அவர்கள் அங்குள்ள கோயில் குளத்தில் குளிக்கச் சென்றபோது, எதிர்பாராத விதமாக மூத்த மகன் விக்னேஷ் குளத்தில் மூழ்கினார்.
அவரைக் காப்பாற்ற தந்தையும் இளைய மகனும் சென்றுள்ளனர். அப்போது மூவரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மூவரின் சடலங்களையும் மீட்டு கடைக்கல் அரசு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கிணற்றில் விழுந்த குப்பை அள்ளும் வாகனம்: 8 வயது சிறுவன் உயிரிழப்பு