கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அடுத்துள்ள அணுக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராணி (46) என்ற ஆட்டோ ராணி. இவர் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா வியாபாரம் செய்து வருகிறார் என புகார் எழுந்து வந்தது.
மேலும், ஆட்டோ ராணி மீது கேரள காவல் துறையினரிடம் இருந்தும் ஏராளமான புகார்கள் உள்ளன. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயண் உத்தரவின் பேரில் கடந்த இரண்டு மாதங்களாக 50க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
அந்த வரிசையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் ஆட்டோ ராணியையும் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறித்தியுள்ளார். இந்நிலையில் ஆட்டோ ராணி கொல்லங்கோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் ரோந்து பணியை மேற்கொண்ட காவலர்கள் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த ஆட்டோ ராணியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் அரை கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. பின்னர் ஆட்டோ ராணியை காவல் நிலையம் அழைத்து சென்று அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.