கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (41). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (38). இவர்களுக்கு திருமணமாகி 14 வயதில் ரவீனா என்ற மகள் உள்ளார். இவர்கள் கடந்த 9 மாதங்களாக அஞ்சுகிராமம் பகுதியிலுள்ள ஸ்ரீ லட்சுமிபுரம் அஜந்தா சிட்டியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இவர் பலரிடம் கடன் பெற்று இருப்பதாக தெரிகிறது. கொடுத்த பணத்தை கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டுள்ளனர். இதனால் மணிகண்டன் சில நாட்களாக மன அமைதியின்றி சுற்றித்திரிந்து வந்துள்ளார்.
இதையடுத்து, மணிகண்டன் விஷம் வாங்கி வந்து குடித்துவிட்டு பின்னர் மனைவி ஈஸ்வரி, மகள் ரவீனாவுக்கும் கொடுத்துள்ளார். பின்னர் ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தவர்களை அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மணிகண்டன் இன்று (செப்.11) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மனைவி, மகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.