கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் 200 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. அதனைத்தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த சவுத் (23) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து ஏராளமான ரூ.200, ரூ.500 கள்ளநோட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் தொடர்புடைய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிபி சாமி (45), மணியன் (51), ஜேக்கப் (40), மணலி பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் ஜேக்கப் சேகர் (39) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கும்பலில் சவுத் கள்ள நோட்டுகள் அச்சடித்து விநியோகம் செய்ய வந்ததுதெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கட்டாக்கடை பகுதியில் அமைந்துள்ள சவுத்தின் வீட்டில் சோதனை செய்தபோது அங்கு கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரம் மற்றும் 77, 000 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சவுத் பிரபல கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்பதும் இவர் மீது கேரளாவில் போதை கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.