கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் ராமதாஸ். இவர் அப்பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இவர், கடந்த 2009ஆம் ஆண்டு நாகர்கோவில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், நான் நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறேன். அதே போல் மற்றொரு மருத்துவமனை திறக்க நாகர்கோவிலில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலத்தை வாங்கி பணிகளைத் தொடங்கினேன். அப்போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் அருள் முருகன் என்பவர், வெளிநாட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு தொடங்கினால் ரூ.50 கோடி கடனாக பெற்று தருவதாக கூறினார். இதற்காக அருள்முருகன் தரகு அடிப்படையில் ஒன்றரை கோடி தரவேண்டும் என கூறினார்.
இதனை தொடர்ந்து அருள்முருகன் என்னிடம் இருந்து ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டார். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து, அருள் முருகனின் அளித்த முகவரியில் உள்ள வீட்டிற்கு சென்றேன். அங்கே அருள் முருகன் என்ற நபர் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் அவர் வழக்கறிஞர் இல்லை என்பதையும், என்னிடம் பண மோசடி செய்ததையும் அறிந்தேன். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி தலைமையிலான தனிப்படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தலைமறைவான அருள் முருகனை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று (ஜனவரி 15) தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் வைத்து அருள் முருகனை தனிப்படையினர் கைது செய்தனர். அவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் அருள்முருகன் போலி வழக்கறிஞர் என்பதும், அருள் முருகனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் வடக்கு காலான்கரை என்பதும், அவர் கொடுத்த முகவரிகள் அனைத்தும் போலியானது என்பதும் தெரிய வந்தது. அருள் முருகன் மீது கேரள மாநிலம் கோழிக்கோடு, நெல்லை, தூத்துக்குடி ஆகிய காவல்நிலையங்களில் கொலை, மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவரிடம் பண மோசடியில் ஈடுபட்ட முருகன் தனது தோற்றத்தை பல்வேறு விதமாக மாற்றி, போலியாக அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை ஆகியவற்றை தயாரித்து இருந்ததும் தெரிய வந்துள்ளது. அவகளை கைப்பற்றிய காவல்துறையினர், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரோஸ் வேலி குழுமத் தலைவர் மனைவியிடம் விசாரணை!