கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட யூனியன் வங்கி கிளை உள்ளது. இந்த கிளையின் மேலாளர் ராகேஷ் கிருஷ்ணன் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது, " எங்களது வங்கியில் தக்கலையை அடுத்த புதுத்தெருவை சேர்ந்த பால சுப்பிரமணியம் (25) என்ற நகை மதிப்பீட்டாளர் வேலை பார்த்து வந்தார். அவரை கஞ்சா மற்றும் ஊக்க மருந்து உபயோகித்ததாக தக்கலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து நான் மதுரை மண்டல அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தேன். அவர்கள், சுப்பிரமணியம் பணியில் இருந்த போது வழங்கிய விவசாய நகை கடன்களை உடனடியாக தணிக்கை செய்யும்படி அறிவுறுத்தினர். அதன்படி தணிக்கை செய்கையில், அவர் நகை மதிப்பீடு செய்து விவசாய நகை கடன் வழங்கியதில் 33 நபர்களின் வங்கிக் கணக்கில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரையில் போலி கவரிங் நகைகளை வைத்து நகை கடன் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் சிலருக்கு மூன்று முறை வரைக்கும் ஒரே வங்கி கணக்கில் போலி கவரிங் நகைகளை வைத்து கடன் வழங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. எனவே வங்கியில் முறைகேடாக மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் பால சுப்பிரமணியன் மீதும், வங்கி வாடிக்கையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருங்கல் காவல் துறை விசாரணை நடத்தி, போலி நகை வைத்து விவசாய கடன் பெற்றதாக கூறப்படும் 33 பேரையும் விசாரணைக்கு வரும்படி நோட்டீஸ் அனுப்பினர். நகை மதிப்பீட்டாளர் பால சுப்ரமணியத்தையும் விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் பால சுப்பிரமணியம் தலைமறைவாகிவிட்டார். வங்கி வாடிக்கையாளர்களிடம் விசாரிக்கையில் நகை மதிப்பீட்டாளர் பாலசுப்பிரமணியம் தான் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் போலி நகைகளை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த நிலையில், இன்று (செப்.13) அந்த வங்கி கிளையில் கணக்கு வைத்திருக்கும் 15க்கும் மேற்பட்டோர் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தனர். அதில், எங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தும், மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் தங்களது நகைகளை மீட்டு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தேசிய மயமாக்கபட்ட வங்கி கிளையில் வங்கி நகை மதிப்பீட்டாளரே போலி நகைகளை வைத்து ஒரு கோடி ரூபாய் வரையில் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.