கன்னியாகுமரி: கேரளா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட அரிக்கொம்பன் என்னும் 35 வயதான ஆண் யானை, அங்குள்ள தேயிலை தோட்டப் பகுதிகளிலும், சுற்றுலா ஸ்தலங்களிலும் சுற்றி வந்தது. இதனை அப்பகுதி மக்கள் அச்சுறுத்தலாகப் பார்த்தனர். இதையடுத்து கடந்த மார்ச் 29-ம் தேதி இடுக்கி மாவட்டம், சின்னக்கானல் வனப்பகுதியில் இருந்து, பெரியார் புலிகள் காப்பகத்தில் உள்ள முள்ளக்காடு பகுதிக்கு வனத்துறையினர் அரிக்கொம்பனை விரட்டினர்.
தொடர்ந்து யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத்துறையினர், அதன் கழுத்தில் ஜி.பி.ஆர்.எஸ் எனப்படும் உள்ளுணர்வு கண்காணிப்பு மொபைல் செயலி பொருத்தப்பட்ட பட்டையைக் கட்டி அனுப்பினர். பின்னர் அங்கிருந்து விரட்டப்பட்ட அரிக்கொம்பன் யானை, தேனி மாவட்டம் மேகமலை நெடுஞ்சாலை பகுதியில் சுற்றித் திரிந்த நிலையில், கம்பம் நகருக்குள் நுழைந்தது.
அரிக் கொம்பனால் கம்பத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் உயிரிழந்தார். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்தனர். இதனால் 4 நாட்கள் கம்பம் நகர மக்கள் அவதிக்கு உள்ளாகினர். இதனை அடுத்து, யானையை பிடிக்க வனத்துறையினர் கடுமையாகப் போராடி, இறுதியாக மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.
பிடிபட்ட அரிக்கொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு, நெல்லை மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் வனத்துறையினரால் விடப்பட்டது. அதன் பின்னர் அந்த யானை கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு வனப் பகுதியில் சுற்றி வருவதாக கூறப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரிக்கொம்பன் யானை உடல் மெலிந்த தோற்றத்துடன் காட்சி அளிக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், யானை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்லும்போது இதுபோன்று உடல் மெலிந்து பின்னர் தான் சரியாகும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது ட்விட்டர் பக்கத்தில் அரிக்கொம்பன் யானை பற்றி பதிவிட்டு இருந்தார். அதன்பின்னர் யானை பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லை.
ரசிகர்களின் கோரிக்கை:
இதனிடையே கேரள மாநிலத்தில் அரிக்கொம்பன் யானைக்கு ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்றும்; அரிக்கொம்பன் யானையின் தற்போதைய நிலவரம் குறித்து தகவல் வெளியிட வேண்டும் எனவும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அரிக்கொம்பனின் நலம் விரும்பிகள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த நிலையில் தமிழக வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு அாிக்கொம்பன் யானை பற்றி மேலும் ஒரு வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
14 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் அரிக்கொம்பன் யானை ஜாலியாக நடந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'அரிக்கொம்பன் யானையின் தற்போதைய வாழ்விடமான அப்பர் கோதையாறில் யானையின் நடமாட்டத்தை கள இயக்குநரின் தலைமையிலான சிறப்புக் குழு கண்காணித்தது. யானை நன்றாக காணப்பட்டது' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில் யானையின் நிலை குறித்து கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா அவர்கள் கூறுகையில், 'அரிக்கொம்பன் யானை தற்போது நடமாடி வரும் இடம் கன்னியாகுமரி மாவட்ட வனப் பகுதி அல்ல. அது தற்போது களக்காடு மலைப் பகுதியில் உள்ள முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் உலாவி வருகிறது. அது தற்போது நீர்நிலை மற்றும் சகதிகள் நிரம்பிய பகுதியில் உலாவி வருகிறது. ரேடியோ காலர் மூலம் யானையின் இருப்பிடம் தெரியவந்துள்ளது.
மேலும் ரேடியோ காலர் நல்ல முறையில் செயல்படுகிறது. யானையின் தற்போதைய நிலவரம் உடல் நிலைமை, போன்றவை குறித்து பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் யானை நடமாடும் இடத்தில் இருந்து 700 மீட்டர் தொலைவில் 3 குட்டிகளுடன் 10 யானைகள் முகாமிட்டுள்ளன என்று களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வன பாதுகாவலர் அரிக்கை மூலம் தெரிவித்துள்ளதாக' கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த விபத்துகள், உயிரிழப்புகள்!