கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய கல்விக் கொள்கை கூட்டத்தில் பங்கேற்ற வைபவ் கல்வி அமைப்பின் நிர்வாகி ஸ்தாணுமூர்த்தி, வித்யா பாரதி தமிழ்நாடு அமைப்பின் தலைவர் குமாரசாமி ஆகியோர் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் நான்கு முக்கிய திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். குழந்தை கல்வி, ஆசிரியர் தர மேம்பாடு, உயர்கல்வி, பண்டைய கால அறிஞர்கள் சார்ந்த கல்வி அறிவு ஆகியவற்றை திருத்தங்களாக முன்வைக்கின்றோம்.
உலக நாடுகள் பெறும்பாலானவற்றில் ஆறு வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் முறைப்படி கல்வி கற்பிக்கப்படுகிறது. கல்வியில் சிறந்த நாடாக கருதப்படும் பின்லாந்து நாட்டில் எட்டு வயதுக்கு மேல்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. அறிவியலாளர்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சி 5 வயதுக்குள் 85% முடிவடைந்துவிடும் என்று கூறுகின்றனர். அந்த சமயத்தில் அவர்களின் மூளைக்கு அதிகளவில் வேலை தரக்கூடாது.
அதேபோல் ஆர்யபட்டா, பாஸ்கரா, சுஷ்ருதா போன்றவர்கள் எவ்விதமான உபகரணங்களும் இல்லாமல் பல கண்டுபிடிப்புகளை நமக்கு தந்துள்ளனர். எனவே, அவர்கள் சார்ந்தும், அவர்களது கண்டுபிடிப்புகள் சார்ந்தும், கலைகள் சார்ந்தும் கல்வியில் பாடத்திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல. அது ஒரு இலக்கு. எனவே ஆசிரியர்கள் மாணவர்களின் பயிற்சித் திறன்களில் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, மனித ஆற்றலை வெளிக்கொண்டு வருவதாகவே நமது கல்விமுறை அமைய வேண்டும். ஆராய்ச்சியை சார்ந்தே உயர்கல்வி அமைய வேண்டுமென அவர்கள் கூறினர்.