கன்னியாகுமரி: பூதப்பாண்டி அருகேவுள்ள மூக்குத்தி மலைப்பகுதியில் சுமார் 60 வயது பெண் காட்டு யானை சுற்றித் திரிந்தது. இதனையடுத்து அழகிய பாண்டியபுரம் வனச்சரகர் மணிமாறன் தலைமையில் வனத் துறையினர் அந்த யானையை கண்காணித்துவந்தனர்.
அப்போது, அந்த யானைக்கு காயம் ஏற்பட்டிருந்ததை வனத் துறையினர் கண்டறிந்தனர். இந்நிலையில், இன்று (ஜூன் 22) அதிகாலையில் திருநெல்வேலி மாவட்ட வன கால்நடை மருத்துவப் பிரிவு மருத்துவர் மனோகரன், பேராசிரியர் முத்துகிருஷ்ணன், தேனி மாவட்ட வன கால்நடை மருத்துவர் கலைவாணன், ஓசூர் வன கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழுவினரும், 30-க்கும் மேற்பட்ட வனத் துறையினரும் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
அங்கு உலாவிக் கொண்டிருந்த யானைக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். மயக்கமான யானையை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது, அந்த யானையின் பிறப்பு உறுப்பு பகுதி, வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த யானைக்கு மருந்துகள் போட்டு சுத்தப்படுத்திய பின்னர், காயங்கள் விரைவில் சரியாக ஊசிகள் போடப்பட்டன. மேலும், மயக்கம் தெளிந்தவுடன் யானை வனப்பகுதிக்குள் அனுப்பிவைக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திண்பண்டங்களைத் தேடி சமையலறையில் நுழைந்த காட்டு யானை!