கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள இராணித்தோட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணிபுரியும் திமுக தொழிற்சங்க ஓட்டுநர் பல்குணம் திடீரென பணி இடமாறுதல் செய்யப்பட்டார்.
அதிமுக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பரிந்துரைத்ததன் காரணமாக ஓட்டுநரைப் பழிவாங்கும் நோக்கில் இடமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுக தொழிற்சங்க ஓட்டுநரின் இடமாற்றத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் அவருக்குப் பணி வழங்க வேண்டும் எனக் கோரி, திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜன் தலைமையில், திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் அலுவலத்தை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து இருதரப்பினர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வரும் 11ஆம் தேதிக்குள் இடமாற்ற ஆணையை ரத்து செய்வோம் என்று அலுவலர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து திமுகவினர் உள்ளிருப்புப் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் ராஜன், அலுவலர்கள் கூறியதைப் போன்று இடமாற்ற உத்தரவு வரவில்லையென்றால் திமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என்றார்.