கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் திமுகவின் முப்பெரும் விழா 48 இடங்களில் நடைபெற்றது. இதில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அவர், "தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில் தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் நூற்றுக்கு நூறு சதவீதம் திமுகவிற்கு சாதகமாக இருக்கிறது. இந்தச் சாதகமான தருணத்தை சீர்குலைப்பதற்கு ஏதாவது வழி கிடைக்குமா என்று டெல்லியில் இருக்கிற பாஜகவும், தமிழ்நாட்டில் இருக்கிற ஆட்சியும் காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றன.
ஆனால், அவர்களுக்குள்ளேயே இன்று மோசமான குழப்பம் உருவாகியுள்ளது. மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலுக்கு யார் கேப்டன் என்ற மிகப் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு இன்று துணை முதலமைச்சர் தனது பண்ணை வீட்டில் அமர்ந்து கொண்டு இருக்கிறார்.
நாளை என்ன நடக்கும் என்று சொல்லமுடியாது.
அக்டோபர் 6ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் எல்லாம் சென்னையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 7ஆம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால், நிச்சயமாக அதற்கான வாய்ப்பு இல்லை. இந்த இரண்டு பேரையும் தவிர்த்து வேறு ஒருவரை முதலமைச்சராக அறிவிக்கலாம் என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
தற்போது, பந்து பாஜகவின் வாசலில் கிடக்கிறது. இந்தப் பந்தை எங்கே அடிக்க வேண்டும் என்பது பாஜகவுக்கு மட்டும்தான் தெரியும். அதையும் தாண்டி மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கை, புதிய சுற்றுச்சூழல் வரைவு கொள்கை எல்லாமே தமிழர்களின் நலனுக்கு எதிரானது. இதை எதிர்த்து தேசிய அளவில் மிகப் பெரிய அமைப்பாக திமுக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்தச் சூழலில் திமுகவை ஒடுக்குவதற்கு அரசும் காவல்துறையும் முயற்சிக்கிறது. இதை தாண்டி பயணிக்கும் வல்லமை திமுகவுக்கு உண்டு. 40 ஆண்டுகால அரசியல் பின்புலம் ஸ்டாலினுக்கு உள்ளது. மிசா என்கிற அக்கினி ஆற்றில் குளித்து எழுந்து வெளியே வந்த ஆளுமை மிகுந்த தலைவராக ஸ்டாலின் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளார்.
குமரி மாவட்டத்தில் மட்டுமல்ல இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் கூட இனி தாமரை மலராது. உத்தரப் பிரதேசத்தில் பட்டியலினப் பெண் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாமல் அதை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை காட்டுமிராண்டித்தனமாக அம்மாநில அரசு தாக்கி வருவதால் இந்தச் சம்பவம் தேசிய அளவில் எதிரொலித்து வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: மக்களை மோசமாக நடத்துகிறது பாஜக - கனிமொழி குற்றச்சாட்டு