கன்னியாகுமரி மாவட்டத்தில், கரோனா தொற்று பாதிப்பு காரணமாக நாள்தோறும் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளிலும், இதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக தங்கும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இருப்பினும் மாவட்ட நிர்வாகம் கரோனா தடுப்பு பணிகளில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். கரோனா பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று கிருமி நாசினி தெளிப்பது, இடத்தை சுத்தம் செய்வது போன்ற கடும் பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா காலத்தில் அயராது உழைக்கும் சுகாதார, தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ ஆஸ்டின் சார்பில் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, சுகாதாரப் பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி எம்எல்ஏ ஆஸ்டின் வாழ்த்து தெரிவித்தார்.