கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த மணிக்கட்டிப்பொட்டல் என்ற ஊரைச் சேர்ந்தவர் எழுத்தாளர் பொன்னீலன். தமிழ் முற்போக்கு இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்க படைப்பாளியான இவர், நெல்லை மாவட்டத்தில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுகதைத் தொகுப்பு, வரலாற்று நூல்கள், நாவல்கள், கட்டுரைகள் என இவரது படைப்பு மிகச்சிறந்த எழுத்தாளராக இவரை எழுத்துலகுக்கு அடையாளம் காட்டியது.
இவரது முதல் சிறுகதைத் தொகுதி ஊற்றில் மலர்ந்தது என்ற பெயரில் 1978இல் வெளிவந்தது. ஆனால் பொன்னீலனை இலக்கிய கவனத்துக்குக் கொண்டு வந்தது 1976இல் அவர் எழுதி வெளிவந்த கரிசல் என்ற நாவலே.
இது பொன்னீலன் அப்போது ஆசிரியராகப் பணியாற்றி வந்த கோவில்பட்டி மக்களையும், நிலத்தையும் சித்தரிக்கும் நாவலாகும். 1992இல் வெளிவந்த இவரது புதிய தரிசனங்கள் என்ற நாவல் இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடிநிலைக் காலத்தைச் சித்தரிக்கும் வகையில் எழுதப்பட்டிருந்தது. இந்நாவலுக்காக 1994ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்.
மேலும், பொன்னீலனின் உறவுகள் என்ற சிறுகதை திரைப்பட இயக்குநர் மகேந்திரனால் 'பூட்டாத பூட்டுகள்' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது.
இதனையடுத்து பென்னீலனின் 80ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். இதில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பி.சி.அன்பழகன் கூறுகையில், குமரி மாவட்டத்தில் பிறந்து இலக்கிய உலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்தவர் பொன்னீலன்.
அவர் இதுவரை 8 நாவல்களையும், 40 நூல்களையும் படைத்துள்ளார். இன்னும் பல புத்தகங்களை படைக்கவுள்ளார். நாவல் என்பது ருத்திராட்சை போன்றது. சிவனின் கண்ணீரில் எவ்வாறு ருத்திராட்சை உருவானதோ, அதுபோல் நாவலாசிரியர்கள் தங்களை உருக்கி நாவலை படைக்கின்றனர்.
பொன்னீலனின் முதல் நாவலான கரிசல் என்னை மிகவும் கவர்ந்தது. எனவே, இந்நாவலை எனது வைகுண்டா சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்படமாக தயாரிக்க உள்ளேன் என்றார்.