கன்னியாகுமரி: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் இந்த திருவிழாவையொட்டி திங்கள் நகர் (திங்கள்சந்தை), இரணியல், குளச்சல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்து திருச்செந்தூருக்கு நடைபயணமாகச் செல்வது வழக்கம்.
அதுபோல், இந்த ஆண்டும் பக்தர்கள் விரதம் இருந்து காவடிகளுடன் திருச்செந்தூர் செல்ல ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதற்காக கடந்த 3 நாட்களாக தலக்குளம், இரணியல், பேயன்குழி, பரசேரி, மேற்கு நெய்யூர், ஆலங்கோடு மற்றும் திங்கள் நகர் (திங்கள்சந்தை) பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் காவடி பூஜைகள் நடைபெற்று வந்தது. இதன்தொடர்ச்சியாக காவடி சிறப்பு வழிபாடும், கிராமம்- கிராமமாக காவடி பவனியும் நடைபெற்றது.
பின்னர் அனைத்து கிராமங்களில் உள்ள காவடிகளும் ஊர்வலமாக மேள-தாளம் முழங்க திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோயில் முன் வந்தடைந்து, அங்கிருந்து அனைத்து காவடிகளும் புறப்பட்டு இரணியல், பேயன்குழி, பரசேரி, பார்வதிபுரம், நாகர்கோவில் வழியாக திருச்செந்தூருக்கு ஊர்வலமாக சென்றது.
இந்த ஊர்வலத்தில் 1 முதல் 12 அடிக்கு மேல் வரை அலகு குத்திய வேல் காவடி, பறக்கும் காவடி, அக்னி காவடி, சூரியவேல் காவடி, தேர் காவடி, ஊஞ்சல் காவடி, பால் காவடி உள்ளிட்டப் பல்வேறு காவடிகளுடன் முருகபக்தர்கள் பக்தியுடன் சென்றனர். இந்த காவடி ஊர்வலத்தைப் பார்க்க மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திங்கள் நகருக்கு வந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க திங்கள் நகரில் இருந்து நாகர்கோவில் செல்லும் அனைத்து வாகனங்களும் தக்கலை மார்க்கமாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.
இதையும் படிங்க: பயங்கரமான ஆளுங்க பாஸ்.. அங்காளம்மன் கோயிலில் பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம்..