கன்னியாகுமரி: இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையை இன்று உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
அதை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்திலும் நேற்று முதல் தீபாவளிப்பண்டிகை களைகட்டி வருகிறது. இன்று வீடுகளில் பட்டாசுகள் வெடித்தும், பலகாரங்கள் சமைத்து விருந்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்தனர். மேலும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து குடும்பத்துடன் கோயில்களுக்கும் சென்று வருகின்றனர்.
அந்தவகையில் குமரி மாவட்டத்தின் முக்கிய கோயில்களில் ஒன்றான 2ஆயிரம் ஆண்டுகள் பழமையான நாகர்கோயில் நாகராஜா கோயிலில் குடும்பத்துடன் குவிந்த பக்தர்கள் - இருள் நீங்கி ஒளி பிறக்கும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் கோயிலில் உள்ள நாகர் சிற்பங்களுக்கு தாங்களே பால் அபிஷேகம் செய்து வழிபட்டு, சுவாமி தரிசனம் செய்து, மகிழ்சியுடன் செல்கின்றனர்.
இதேபோன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் உள்ளிட்டப் பெரும்பாலான முக்கிய கோயில்கள் அனைத்திலும் பக்தர்கள் அதிக அளவில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதையும் படிங்க: தீபாவளி நாளில் பழனியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்