மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. அதேபோன்று மக்கள் தொகை பதிவேட்டுக்கும் (NPR) எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து தமிழ்நாட்டிலும் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பீர் முகமது ஒலியுல்லாஹா தர்ஹா அருகே இஸ்லாமியப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இரவு பகல் என்று பாராமல் இரண்டாவது நாளாக இந்தப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தப் பெண்களின் போராட்டமானது கடந்த 22ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில்,
- குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
- தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு நடத்தக் கூடாது.
- தமிழ்நாடு அரசு அதற்கான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு கோடி கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய பெண்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும், இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்பில்லை எனப் பொய்யான தகவலைக் கூறியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குமரியில் சிஏஏக்கு ஆதரவாக பேரணி!