கன்னியாகுமரி : மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன.
இதனால் இரு அணைகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குழித்துறை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந் மு.வடநேரே நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட முக்கிய அணைகள் முழு கொள்ளவை எட்டி வருகின்றன. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டு அணைகளில் இருந்து வினாடிக்கு மூன்றாயிரம் கண அடி தண்ணீர் வெளியற்றபட்டு வருகிறது.
மேலும், அணைகளுக்கு வரும் நீர்வரத்து, வெளியேற்றப்படும் நீர் ஆகியவை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது தவிர வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளாகக் கண்டறியப்பட்ட இடங்களை ஒன்பது மண்டலங்களாகப் பிரித்து அவற்றையும் அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்” என்றார்.