கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேயுள்ள ஆற்றூர் பகுதியைச் சேர்ந்தவர் பேராசிரியர் விஜின். இவரது மனைவி மெர்லின் திவ்யாவை முதல் பிரசவத்திற்காக மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. மிஷன் தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்த்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை மெர்லின் திவாயாவுக்கு பிரசவ வலி ஏற்படவே பிரசவ அறைக்கு கொண்டு சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து ஒரு அவசர ஊர்தியில் தாயையும் சேயையும் உறவினர்களுக்கு தெரியாமல் கொண்டுசெல்ல மருத்துவமனை நிர்வாகம் முயன்றது.
அப்போது, அங்கு வந்த உறவினர்கள் தாயையும் சேயையும் எங்கு கொண்டு செல்கிறீர்கள் எனக் கேட்டுள்ளனர். அதற்கு மருத்துவமனை ஊழியர்கள் உயர் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தனர். பின்னர், அவர்களை உறவினர்கள் பின்தொடர்ந்து சென்றனர்.
இதையடுத்து, குழித்துறை அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் தாயும்-சேயும் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, தாயும்-சேயும் உயிரிழந்ததை மறைக்கவே சி.எஸ்.ஐ. மருத்துவமனை நிர்வாகம் நாடகமாடியதாக மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.