தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக குமரி மாவட்டத்திற்கு மத்திய ரிசர்வ் படையினர் வந்துள்ளனர். இவர்கள் இன்று (மார்ச்3) நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியானது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நராயணன் தலைமையில் நடைபெற்றது. இது குறித்து, பத்ரி நாராயணன் கூறுகையில், ’சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பிற்காக வந்துள்ளனர்.
மக்களுக்கு பாதுகாப்பு எண்ணம் உருவாகும் வகையில் இந்த ஊர்வலம் நடைபெறுகிறது. நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இந்த ஊர்வலமானது, இன்னும் இரண்டு நாள்களில் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நடைபெறும். பொதுமக்கள் தங்களின் விருப்பமான அரசியல் கட்சிக்கு வாக்களிக்கலாம். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை நாங்கள் ஏற்படுத்தி வருகிறோம்.
மத்திய ரிசர்வ் காவலர் படையினர் வந்த நிலையிலும் கூடுதல் வீரர்களை எதிர்பார்கிறோம். கூடுதல் வீரர்கள் வந்ததும் பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்படும். இந்த வீரர்கள் பெரும்பாலும் கொடி அணிவகுப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
பொதுமக்களுக்கு பாதுகாப்பும் நம்பிக்கையும் ஏற்படுத்தும் வகையில் இந்தக் கொடி அணிவகுப்பு இருக்கும். அதுபோல குமரி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மத்திய ரிசர்வ் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்’ என்றார்.
இதையும் படிங்க: கரூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு!