கன்னியாகுமரி மாவட்டத்தில் நாட்டு மாடுகள் வளர்ப்பவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளது. மாட்டின் உரிமையாளர்கள் அதனை வளர்ப்பதற்கு தேவையான தீவனம் கிடைக்காமல் அவதிப்படுவதால், குடியிருக்கும் பகுதிகளில் உள்ள மலையடிவாரத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவந்தனர். ஆனால், தற்போது நாட்டு மாடுகளை மேய்ப்பதற்கு வனத்துறை கடுமையான கட்டுப்பாடு விதித்து தடை விதித்துள்ளது.
அதையும் மீறிச்சென்றால் மாடுகளை பறிமுதல் செய்து மாட்டு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், 2014ஆம் ஆண்டு வரை வனத்துறைக்குச் சொந்தமான பகுதிகளில் நாட்டு மாடுகள் மேய்ச்சலுக்கான அனுமதியினை வழங்கி வந்த வனத்துறை, தற்போது மறுத்து வருகிறது.
இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நாட்டு மாடுகள் மேய்ச்சலுக்கான அனுமதி சீட்டினை உடனே வழங்க வேண்டும் எனவும், பொய் வழக்குகள் போடும் வனத்துறையை கண்டிக்கும் விதத்திலும் ஆரல்வாய்மொழியில் நாட்டு மாடு வளர்ப்போர் சங்கம் சார்பில் பாட்டு பாடி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.