சீனாவிலிருந்து பரவத்தொடங்கி உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பால் இதுவரை 210 நாடுகளைச் சேர்ந்த 33 லட்சத்து 25 ஆயிரத்து 620 பேர் பாதிக்கப்பட்டும், 2 லட்சத்து 34 ஆயிரத்து 495 பேர் உயிரிழந்தும் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு இன்று உறுதி செய்துள்ளது.
இந்தக் கொடிய வைரஸ் இந்தியாவில் தீவிரமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்த வைரஸ் பெருந்தொற்றால் 2 ஆயிரத்து 323 பேர் பாதிக்கப்பட்டும், 27 பேர் உயிரிழந்தும் உள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.
பள்ளி-கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தும் தொடர்ந்து மூடிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பொது இடங்களில் கூடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில் காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறை, பள்ளிக் கல்வித் துறை என அனைத்துத் துறைகளும் ஈடுபட்டுவருகின்றன. இதில் தன்னார்வலர்களும் இணைந்து தம்மாலான பணிகளை முன்னெடுத்துவருகின்றனர்.
எனினும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் பொதுமக்கள் சந்தைகள் கடைகளில் அதிக அளவு பொருள்களை வாங்க குவிந்து வருவதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் சார்பில் கோவிட்-19 வைரஸ் குறித்த விழிப்புணர்வுப் பரப்புரை நிகழ்ச்சி குமரி மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. புதிய பேருந்து நிலையம், தற்காலிக சந்தைப் பகுதி என பல இடங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் மாறுவேடம் அணிந்து பொதுமக்கள் முன்னிலையில் பாட்டு பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், தகுந்த இடைவெளி குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது குறித்தும் உலகை கரோனா வைரஸ் எவ்வாறு அச்சுறுத்திவருகிறது என்பது குறித்தும் எடுத்தியம்பப்பட்டது.
இந்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இதையும் படிங்க : கூடுதலாக நிவாரண உதவி வேண்டும் - தெருக்கூத்து கலைஞர்கள் கோரிக்கை