இலங்கையில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இலங்கையிலிருந்து கடல் வழியாக கேரளாவிற்கு 15 பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதாக கேரள உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. அந்த பயங்கரவாதிகள் வெள்ளை நிற படகில் மினிகாய் தீவு, லட்சத் தீவுப்பகுதிகளில் வந்ததாகவும், கேரளா கடல் மார்க்கத்தில் நுழைய முயற்சி செய்வதாக கேரள உளவுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கேரளாவில் திருச்சூர், கோழிக்கோடு பகுதிகளில் கடலோரக் காவல் படையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், அருகிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் படகுகள் சேதடைந்து உள்ளதால் சோதனை நடத்த முடியாமல் கடலோரக் காவல் பாதுகாப்புப் படையினர் முடங்கி உள்ளனர்.
குமரியில் கடலோரக் காவல்படைக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட நான்கு படகுகளும் பழுதடைந்து ஆறு மாதங்களாகியும், அரசுத் தரப்பில் பழுதுபார்த்து செய்து கொடுக்காததால் ரோந்துப் பணிகளில் ஈடுபட முடியாமல் பாதுகாப்புப் படையினர் முடங்கி உள்ளனர்.