கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த மாங்காலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமடைந்து கடந்த நான்கு நாள்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு குமரி மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.
இந்தச் சூழலில், இரண்டு நாள்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் சளி காரணமாக கேரளாவில் உள்ள பாறசாலை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.
அப்போது அவரை பரிசோதித்ததில் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மீண்டும் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இவருக்கு உதவியாக இருந்து, மருத்துவனைக்கு அழைத்து சென்ற நபர் தற்போது தலைமறைவாகியுள்ளார். அந்த நபரைத் தேடும் பணியில் தமிழ்நாடு மற்றும் கேரள காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, கரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் வசித்து வந்த பகுதியை காவல் துறையினர் தங்களின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: கோவிட் 19 பெருந்தொற்றைப் பரப்பியது வௌவால்களா? - ஆய்வாளர்கள் விளக்கம்