உலக அளவில் கரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் பல மாநிலங்களில் இந்த வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
கரோனா வைரஸ் தமிழ்நாட்டில் பரவிவிடாமல் தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன்படி பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31ஆம் தேதி வரை விடுமுறை அளித்தும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், திரையரங்குகள் ஆகியவற்றையும் மூட உத்தரவிட்டுள்ளது. மேலும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், பேரூராட்சி அலுவலர்கள் கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகளில் சென்று அங்குள்ள சுற்றுலாப் பயணிகளின் பதிவேடுகளை ஆய்வுசெய்தனர்.
அதில் குறிப்பிடப்பட்டிருந்த முன்பதிவுகளை, குறித்து வைத்துக்கொண்ட பின்னர், "தங்கும் விடுதிகளில் முன்பு முன்பதிவு செய்தவர்களைத் தங்கவைத்துக்கொள்ளுங்கள். புதிதாகச் சுற்றுலாப் பயணிகளிடம் முன்பதிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம்" எனக் கூறிய அலுவலர்கள் தங்கும் விடுதிகளை மூட வலியுறுத்தியதோடு அதன் முன்பு 'குலோஸ்ட்' (CLOSED) என்று எழுதி வைக்குமாறு அறிவுறுத்திவிட்டுச்சென்றனர்.
இதையும் படிங்க: காய்ச்சல் உள்ளவர்கள் உணவைக் கையாள அனுமதியில்லை - ரயில்வே