கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தடையை மீறி வெளியே வரும் பொதுமக்களை காவல் துறையினர் கண்டித்து வருகின்றனர். தொடர்ந்து தவறு செய்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் மருத்துவமனைகள், பொது இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் தொடர்ச்சியாக பணியாற்றி வருகின்றார். இதனால் இவர்களுக்கு எளிதாக கரோனா தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு காவல் துறையினருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதன்படி, குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காவலர்களிடமிருந்து பாதுகாப்பான முறையில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு சேகரிக்கப்படும் சளி மாதிரிகள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அங்கு தொற்று உள்ளதா இல்லையா என்பது குறித்து பரிசோதனை முடிவு வந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கரூரில் பத்திரிக்கையாளர்களுக்கு கரோனா பரிசோதனை - அமைச்சர் நேரில் பார்வை