கரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழகம் முழுவதும் திரையரங்குகள், பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் என மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு பாறை, திருவள்ளுவர் சிலைக்கு செல்ல, சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் கைகளை சுத்தம் செய்யவும், சானிடைசர் போன்றவை வழங்கப்பட்டதோடு கிருமிநாசினிகளும் படகுகளில் தெளிக்கப்பட்டன.
குறிப்பாக, வட மாநில சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையக்கூடாது என்ற நோக்கில், இன்று காலை முதல் படகு போக்குவரத்து துவங்கியது. இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணிக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இது மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பெயரில் படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே, சுற்றுலா பயணிகள் குறைந்துள்ளதால் கடைகள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் படகு போக்குவரத்தும் முடங்கியதால், கன்னியாகுமரி வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும், சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை, சுனாமி ஏற்பட்ட காலத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் ரத்து செய்யப்படுவது, இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் விவகாரம்: வீட்டிலிருந்தே பணிபுரியும் ஐடி ஊழியர்கள்