கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவுச் சங்கத்தின் ஊழியர் சங்கக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் வங்கி ஊழியர் சங்க மாநில நிர்வாகிகள், எம்.பி. வசந்தகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதில் பங்கேற்ற அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இந்தியா முன்னேறிவருகிறது என்று சொன்னாலும் பல்வேறு நிலைகளில் நாம் பின்தங்கிதான் உள்ளோம். பொருளாதார ரீதியான முன்னேற்றம் வேண்டும். அதற்கு வங்கிகள்தான் முதுகெலும்பு. ஆனால் அரசு இதில் கவனம் செலுத்தவில்லை.
அரசின் கொள்கைகளை மாற்ற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள் தனியார்மயமாக்கலை நிறுத்த வேண்டும். தனியார்மயமாக்கலை கைவிடவில்லை என்றால் அகில இந்திய அளவில் போராட்டங்களில் ஈடுபடுவோம்.
இந்தியா முழுவதும் வணிக வங்கிகளில் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் வாராக்கடன் உள்ளது. இவை அனைத்தும் பெரும் முதலாளிகளுக்கு வழங்கப்பட்டது. இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வணிக வங்கிகளில் ரூ.117 லட்சம் கோடி மக்கள் சேமிப்பு வைத்துள்ளதால் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இல்லையென்றால் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்துவோம்" எனத் தெரிவித்தார்.