கடந்த ஒரு வாரத்திற்கு முன் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே ஜீரோ பாயிண்ட் பகுதி என்னும் மலைப் பகுதிகளில் அண்மைக் காலமாக உயர்மின் கம்பிகள் அறுந்து விழுந்து உயிரிழப்புகள் அதிகரித்துவருகின்றன.
இந்தப் பகுதியில் உள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) தீப்பிடித்து எரிந்தபோது சிற்றார் பகுதிகளில் உள்ள மன்மோகன், சஜின் ஷாலு, சுபாஸ் ஆகிய மூன்று இளைஞர்கள் தீயை அணைக்க முயன்றுள்ளனர். அப்போது உயர் அழுத்த மின்சாரம் அவர்கள் மீது பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
இதைப்போன்று கன்னியாகுமரி அருகே நாடான் குளம் பகுதியில் உள்ள அம்பேத்கார் நகரில் ராகுல் என்னும் எட்டு வயது சிறுவன் தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் உள்ள உயர் மின் கம்பி அறுந்துவிழுந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். கடந்த பத்து நாள்களில் மட்டும் உயர்மின் கம்பி அறுந்துவிழுந்து நான்கு பேர் பலியாகியிருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து நாகர்கோவில் வடசேரி பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன் மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதியில் உயர்மின் கம்பி அறுந்துவிழுந்தது. இதனை சுதாரித்துக் கொண்டதால், அப்பகுதி இளைஞர்கள் சேர்ந்து மின்கம்பி விழுந்த இடத்தில் மற்றவர்கள் சென்றுவிடாமலிருக்க பாதுகாப்பை ஏற்படுத்தியதால் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.
இதுபோன்ற உயர்மின் கம்பியால் ஏற்பட்ட தொடர் உயிரிழப்புகளுக்குக் காரணம் மின் வாரியத்தின் அலட்சியமே என பல்வேறு அமைப்பினர் தமிழ்நாடு அரசை குற்றஞ்சாட்டிவருகின்றனர். மின் கம்பங்களும் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும் அதனை மாற்ற மின் வாரியம் முன்வரவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர் அவ்வூர் மக்கள்.
இதையும் படிங்க: ஆவடி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் பிச்சையெடுக்கும் போராட்டம்!