கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் பாதுகாப்புச் சட்டத்தைக் கண்டித்து சத்தியாகிரக போராட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த விஜய் வசந்த், “ரஜினி அரசியலுக்கு வருவது என்றால் ஏற்கனவே வந்திருக்க வேண்டும். இப்போது எழுந்த பிரச்சினை அவரை அரசியலுக்கு அழைத்துவரும் சூழ்ச்சியா? அல்லது அவரை அரசியலுக்கு வரவிடாமல் செய்யும் சூழ்ச்சியா? என்பது புரியவில்லை.
மத்திய அரசு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ஒரே நாளில் அறிவித்தது போன்று எந்த அரசியல் கட்சியினரின் கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக விவசாயிகள் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது.
இது யாரோ ஒரு தனி நபருக்காக கொண்டுவந்த சட்டம். இந்த விவசாயிகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். எனவே மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாய விரோத சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், இதை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது” என்றார்.
இதையும் படிங்க...'காதலன் வருவான் என்னை கூட்டிப்போக...' தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!