கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரதான நெடுஞ்சாலையாக விளங்கும் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயங்கிவருகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு சீர்குலைந்து காணப்படுகிறது. இதனால் வாகன நெரிசல் அதிகமாகி வாகனங்கள் நீண்ட வரிசையில் மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்களும், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும், பணிக்கு செல்லும் ஊழியர்களும், பொதுமக்களும் போக்குவரத்து நெசிசலில் சிக்கி கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், கடந்த மூன்று மாத காலமாக நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கல் செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில் இன்று நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள வில்லுக்குறி பகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோரின் தலைமையில் திரண்ட இருநூறுக்கும் மேற்பட்ட காங்கிரஸார் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களும், காவல் துறையினரும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர், அலுவலர்கள் தரப்பில் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க : சாலையை சீர் செய்ய பள்ளி மாணவி செய்த காரியத்தை பாருங்களேன்...!