கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பெரும்பாலான பகுதிகளில் குடிநீர்த் திட்டப் பணிகள், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்காகச் சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடாத நிலையில் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
இதனால், ஏராளமான விபத்துகளும், உயிர் பலிகளும் நிகழ்ந்துவருகின்றன. இந்நிலையில், பழுதடைந்த சாலைகளை உடனடியாகச் செப்பனிட கேட்டு காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே மனு கொடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் இன்று (டிச. 07) மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய குழு உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டோர், மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய முற்பட்டபோது அங்கிருந்த காவல் துறையினர், அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதில், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு காணப்பட்டது. தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் சாலைகளைச் செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் போராட்டக்காரர்களுக்கு உறுதியளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.
10 நாள்களுக்குள் சாலைகள் செப்பனிட நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்தகட்டமாக மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மக்கள் நடுத்தெருவில் போராடும் சூழலில், நாடாளுமன்றக் கட்டடம் எதற்கு? - விஜய் வசந்த் காட்டம்