கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாவட்டங்கள் சென்ற மக்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு உதவுவதற்காக பதிவு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், பெரும்பாலானவர்கள் விண்ணப்பிக்க குவிந்து வருவதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது.
இந்நிலையில், அவர்களுக்கு உதவி புரியும் வகையில் குடிபெயர்ந்த மக்களுக்கான உதவி மையம் ஒன்று நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தொடங்கப்பட்டது. இந்த மையத்தின் தொடக்கவிழா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த உதவி மையத்தின் தலைவராக காங்கிரஸ் நிர்வாகி ராபர்ட் புரூஸ் வழிநடத்துவார். அவருடன் பணியாற்ற 9 பேர் கொண்ட குழு ஒன்றும் காங்கிரஸ் மாநில குழுவால் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இந்த உதவி மையத்தில், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள், தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு செல்பவர்கள், வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்புபவர்கள் என மூன்று விதமான விண்ணப்பங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. உதவி மைய அலுவலகத்தின் மூலம் முறைப்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க : ஊழியர்களின் ஓய்வு வயது 59 விவகாரம் - தமிழ்நாடு அரசு விளக்கம்