கடந்த மக்களவைத் தேர்தலில் குமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் ஏற்கனவே தான் வகித்துவந்த நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ பதவியிலிருந்து ராஜினாமா செய்து, குமரி தொகுதியில் எம்.பி. வேட்பாளராகப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
இவர் இவ்வாறு போட்டியிடும்போது குமரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குமரி மாவட்டத்தில் எம்.பி. பதவிக்கு போட்டியிட தகுதியான ஆள்கள் இல்லையா என குமரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் பலர் அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு புகார் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில், குமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்குள்ளாக இரு பிரிவாக மோதிக்கொண்டனர். அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி குமரி மாவட்ட எம்.பி. வசந்தகுமார் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் பேசிய முழு விவரம் வருமாறு:
காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர் அவரது இல்லத் திருமணத்திற்கு என்னை அழைத்திருந்தார். திருமணத்திற்கு என்னால் செல்ல முடியவில்லை. சிறிது தாமதமாகச் சென்றேன். அப்போது சாப்பாடு பந்தி நடந்துகொண்டிருந்தது.
காங்கிரஸ் கட்சியினர் கண்டிப்பாக நான் சாப்பிட்டுவிட்டுதான் செல்ல வேண்டும் என்று கூறினர். இதனைத் தொடர்ந்து நானும் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டேன். அப்போது நான் இருக்கும் இதே காங்கிரஸ் கட்சி சார்பில் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ஒருவர் இங்க பாரு ஒரு காங்கிரஸ் எம்.பி. திண்ணுகிட்டு இருக்கான். இவன் எல்லாம் ஒரு மனுஷனா என என் காதுபட பேசிக் கொண்டே போனார்.
காங்கிரஸ் கட்சியில் எம்.பி.யாக இருக்கும் என்னை, ஒரு காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவரே என் காதுபட கேட்கிறார். இது சாப்பிட்ட என் தப்பா, அழைத்த காங்கிரஸ் நிர்வாகிகள் தப்பா, இல்ல சாப்பிட வசந்தகுமார் சாப்பிட வழியில்லாமல் அங்கு போய் சாப்பிட்டேனா?
நான் யார் கூப்பிட்டாலும் போகிறேன். கல்யாண வீடு என்றாலும் போகிறேன், சடங்கு வீடு என்றாலும் போகிறேன். அவர்கள் எது கொடுத்தாலும் சாப்பிடுகிறேன். சுக்கு காபி கொடுத்தால்கூட குடித்துவிட்டுச் செல்கிறேன்.
அப்படி என்றால் வசந்தகுமார் ஒன்றும் இல்லாதவன்; என்னிடம் வந்து சுக்கு காபி குடித்துக் கொண்டுபோகிறான் என்று சொல்லலாமா? நமக்குள் எதுவும் பேச வேண்டாம். நீங்கள் பேசுபவை என மனதை புண்படுத்துகின்றது. இப்படிப் பேசினால் எப்படி நான் வேலை செய்ய முடியும்.
அதில் ஒருவர் சொல்கிறார் வசந்தகுமார் தான் ரோடு போடவில்லை என்று. நான் எம்பியாக இருக்கிறேன். எதிர்க்கட்சியில் இருக்கிறேன். நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கிறேன். அவ்வளவுதான் செய்ய முடியும். ஆனால், நம்ம ஆள்களே வசந்தகுமார் எம்.பி. ரோடு போட மாட்டேன் என்கிறார் என்றால் நான் என்ன செய்ய முடியும். மிகவும் சங்கடமாக உள்ளது. இருந்தாலும் காங்கிரசில் இருப்பதே பெருமை, காங்கிரசை வளர்ப்பதே பெருமை என்று நினைக்கிறேன்.
யார் என்ன சொன்னாலும் நான் உங்கள் பின்னால் இருப்பேன். எவ்வளவு வெற்றி வந்தாலும், எவ்வளவு தோல்வி வந்தாலும் கண்டிப்பாக நான் உங்கள் பின்னால் இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி.யின் இந்த மனம் திறந்த பேச்சு குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதலை வெளிப்படையாகப் படம் பிடித்துக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க : #D43 அப்டேட்: 'கர்ணன்' தனுஷ்...'மாஃபியா' கார்த்திக் நரேன்...'அசுரன்' ஜிவி பிரகாஷ்