கன்னியாகுமரி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி., பதவி பறிப்பு சம்பவம் ஒரு ஜனநாயகப் படுகொலை எனக்கூறி காங்கிரஸ் கட்சியினர் நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொடர்ந்து ஒரு வாரக் காலமாக பல்வேறு விதமான போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. நேற்று மாலை நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக வந்த போது பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி தொண்டர்களும், பாஜக கட்சி தொண்டர்களும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
மேலும் கற்கள், கட்டை உள்ளிட்டவைகள் கொண்டு தாக்கிக்கொண்டதோடு காங்கிரஸ் கட்சிக் கொடிகள் எறிப்பு போன்ற பல்வேறு சம்பவங்களால் நாகர்கோவில் பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இருதரப்பிலும் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து நேற்று இரவு நேரத்தில் காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அதே போல பாஜக அலுவலகத்திலும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த சம்பவத்தால் நாகர்கோவில் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எங்கள் கட்சி தொண்டர்கள் மீது கொலை, வெறி தாக்குதல் நடத்திய பாஜக கட்சியினை சேர்ந்தவர்களைக் கைது செய்ய வேண்டும், அவர்கள் அலுவலகத்தில் கம்பு போன்ற ஆயுதங்கள் உள்ளனவா? என காவல்துறை சோதனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
அதேநேரத்தில் எங்கள் அலுவலகத்தில் நுழைந்து தாக்குதல் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒருவருக்கொருவர் மாறி மாறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்கள் தலைமையோடு பேசி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுப்போம் என்று பாஜக தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் நாகர்கோவில் முழுவதும் பதட்டமான ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது.