கன்னியாகுமரி மாவட்டம் அந்தரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரசுவாமி (வயது 55). இவர் அதிமுக ஊராட்சி செயலாளராகவும், அப்பகுதியிலுள்ள பெருமாள் கோயில் பக்தர்கள் சேவா சங்கத்தின் பொருளாளராகவும் இருந்து வருகிறார். அந்தரபுரம் ஊரில் சங்கரலிங்கம்பாறை ஊருக்கு செல்லும் பாதையில் இவருக்கு சொந்தமாக உரக்கடை ஒன்று உள்ளது.
இந்தக் கடையை அதே ஊரைச் சேர்ந்த காந்தி என்பவருக்கு விற்க முன்வந்துள்ளார். இதையறிந்த அந்தரபுரம் திமுக யூனியன் கவுன்சிலர் பூதலிங்கம் பிள்ளை (வயது 45), காந்தியை அந்தரபுரம் ஊரிலிருந்து நீக்கி வைத்துள்ளோம். அவருக்கு இந்த கடையை விற்க கூடாது என கடையின் ஷட்டரை மூடி தகாத வார்த்தைகளால் குமாரசுவாமியை திட்டியதாக தெரிகிறது.
இதை தட்டி கேட்ட குமாரசுவாமியை, பூதலிங்கம்பிள்ளை உள்ளிட்ட ஐந்து பேர் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தைக்குச் சென்ற சிம்மிணி என்ற முதியவரையும், சங்கரலிங்கம்பாறையை சேர்ந்த பால் என்பவரையும் பூதலிங்கம் பிள்ளை அடித்து கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக ஊராட்சி செயலாளர் குமாரசுவாமியும், திமுக யூனியன் கவுன்சிலர் பூதலிங்கம் பிள்ளையும் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் எவை?