கரோனா அச்சம் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக தனி மனித இடைவெளியை கருத்தில் கொண்டு அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் போதை வெறியர்கள் மாற்று போதைப் பொருட்களைத் தேடி அலையும் நிலை அதிகரித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி கள்ளச்சாராயம், தடைசெய்யப்பட்ட புகையிலை, கஞ்சா ஆகியவற்றின் விற்பனை தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பல்வேறு வகையான போதைப் பொருட்களின் வியாபாரிகள் தற்போதைய சூழலைப் பயன்படுத்தி போதைப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனைத் தடுக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர், தனிப்படை காவல் துறையினர் ரோந்து கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளனர். தங்களுக்கு கிடைக்கும் ரகசியத் தகவல்களைக் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் லோடு ஆட்டோ ஒன்றை சோதனையிட்ட போது அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை இருப்பது தெரிய வந்தது. இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் போதைப் பொருட்கள் நாகர்கோவில் அடுத்த வட்டவிளைப் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து வட்டவிளை பகுதியில் தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அதேபகுதியில் வேறு எங்கேனும் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்படுகிறதா எனவும்; விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்டார் காவல் நிலைய காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு குடோன் உரிமையாளர் வட்டவிளை பகுதியைச் சேர்ந்த முரளிதரன் (வயது 29) என்பவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.