கன்னியாகுமரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன், “நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு தமிழகத்தில் மதுரை தேனி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இதனால் தமிழ்நாடு தேர்தல் அலுவலர் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது. 23ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணும் பணியை கண்காணிக்க ஒரு உயர்மட்ட பார்வையாளர் நியமனம் செய்யப்பட வேண்டும். ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று அமெரிக்கா விதித்துள்ள தடை இந்தியாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த தடையை இந்தியா ஏற்கக்கூடாது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அம்மாநில அரசுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் தவறானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், அதற்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பது ஏற்கக்கூடியது அல்ல. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாநில அரசு போர்க்கால அடிப்படையில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 7 பேர் விடுதலை தொடர்பாக இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக அவர்களை விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.