கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு விவகாரத்தில் அதிமுக - பாஜக இரு கட்சிகளும் ஏதோ நாடகம் நடத்துகின்றன. விவசாயிகள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காத நிலையில் ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெற உள்ளது.
இந்தப் போராட்டங்களில் ஈடுபடும் விவசாயிகளை ஆதரித்து அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் நாளை (ஜன. 06) சென்னையில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.
பல்வேறு மாநிலங்கள் வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், புதிய வேளாண் சட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை பீரங்கியாகச் செயல்பட்டுவருகிறார். இதன்மூலம் முதலமைச்சர் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்குத் துரோகம் செய்துவருகிறார்” என்றார்.
மேலும், “கரோனா தடுப்பூசி தொடர்பாக ஒரு வெளிப்படைத்தன்மை வேண்டும். விஞ்ஞானிகளின் கருத்தைக் கேட்டு மத்திய அரசு அதனை வெளிப்படையாக வெளியிட வேண்டும். பி.எம். கேர் நிதியை எடுத்து அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி வழங்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் அம்மா மினி கிளினிக் அமைக்க வேண்டும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர பாஜக நிர்பந்தம் செய்தது. தற்போது உள்ள சூழ்நிலையில் அரசியல் கட்சி தொடங்கினால் அதில் ஏற்படும் தோல்வி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நினைத்து அரசியலிலிருந்து ரஜினி பின்வாங்கியதாகத் தெரிகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம் நாத் கைது