கன்னியாகுமரி: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான பேச்சிப்பாறையில் இருந்து கோதையார் வழியாக செல்லும் மலைப்பகுதிகளில் மோதிரமலை, தச்சமலை, முடவன்பொற்றை, கோலஞ்சி மடம் உள்ளிட்ட 16 மலைக் கிராமங்கள் உள்ளன.
இதில், மலைக்கிராம மக்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பேச்சிப்பாறையில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு இப்பகுதி மாணவ, மாணவியர்கள் காட்டு வழியாக நடந்தே வந்து செல்கின்றனர். மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால்கூட நோயாளிகளைத் தோளில் தூக்கிக்கொண்டு நடந்தே ஆற்றைக்கடந்து ஆற்றின் தண்ணீரில் இறங்கி தான், இவர்கள் 15 கிலோ மீட்டர் குறைந்தது பயணம் செய்ய வேண்டும் என்ற ஒரு ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இதில், கடந்த 12ஆம் தேதி 67 வயது முதியவர் வேலு என்பவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது அவரை அவருடைய மகன் விக்னேஷ் 3 கிலோ மீட்டர் தூரம் காட்டு வழியாக தோளில் சுமந்துசென்றார்.
அப்போது, உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க இயலாமல், அவர் உயிரிழந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பத்மாநாபபுரம் சார்ஆட்சியர் கவுசிக் தலைமையில் அலுவலர்கள் குழுவினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவது குறித்து ஆய்வு செய்தனர். திட்ட மதிப்பீடுகளையும் உடனே தயார் செய்யவும் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிகிச்சைக்காக தந்தையை தூக்கிச்சென்ற மகன் - மலைக்கிராமங்களின் நிலை