கன்னியாகுமரி: தேசிய மீன்வளக் கொள்கை 2020 கைவிடவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் போராட்டம் நடைபெற்றது.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து கடலையும் கடற்கரையும் பெருநிறுவன முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் தேசிய மீன்வளக் கொள்கை 2020-ஐ, உடனே ரத்துசெய்ய வேண்டும் என்றும், டெல்லியில் தொடர்ந்து கடும் குளிரில் குடும்பத்தோடு தேசிய வேளாண் சட்டத்தினை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மீனவ மக்கள் குடும்பத்துடன் குளச்சல் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு குளச்சல் பங்குத்தந்தை செல்வன் தலைமைத் தாங்கினார். அப்போது போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்கள் பேசுகையில், "தேசிய வேளாண் சட்டம் 2020 உலகுக்கு சோறுபோடும் விவசாயிகளைக் கூறுபோடும் நாசகாரத் திட்டம். பெருநிறுவனங்களை மட்டும் வளரவைக்கும் சாமானிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டம். இதனை ரத்து செய்யும்வரை விவசாயிகளின் போராட்டத்திற்கு கரம்கொடுப்போம்.
மேலும், தேசிய மீன்வளக் கொள்கை 2020 நிறைவேற்றப்பட்டால், நமது பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கு பேராபத்து ஆகும். நாம் மீன்பிடிக்கும் கடலை நம்மிடமிருந்து பிடிங்கி, அதைப் பெருநிறுவனங்களுக்குத் தாரைவார்க்க நினைக்கும் மத்திய அரசையும், துணைபோகும் மாநில அரசையும் மீனவ குடும்பமாய் எதிர்ப்போம்" எனத் தெரிவித்தனர்.