கன்னியாகுமரி: அருமனை சந்திப்பில் மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் இரண்டு அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அங்கு மது வாங்க வரும் குடிமகன்கள், அவ்வப்போது மதுபோதையில் ஆடையில்லாமல் சாலையோரங்களில் விழுந்து கிடப்பது வழக்கம். இதனால், அந்த வழியாக செல்லுவோர் முகம் சுழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த மதுக்கடைக்கு இன்று (ஜூன்13) 3 குடிமகன்கள் மது வாங்க வந்துள்ளனர். அவர்களுக்கும் ஏற்கனவே அங்கிருந்த மற்ற குடிமகன்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் ஆடையைக் கழற்றி விட்டு மீண்டும் அங்கு நின்றிருந்தவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, மது கடைக்குள் புகுந்தும் சத்தமிட்டு மிரட்டலில் ஈடுபட்டார்.
அத்துடன் விடாத குடிமகன்கள், சாலையில் நின்றும் அட்டகாசம் செய்ததால் அந்த வழியாக சென்ற பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பல மணி நேரம் இந்த அட்டகாசம் நடந்தது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு! மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு