கன்னியாகுமரி: சிஐடியு திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சகாய ஆண்டனி தாக்கப்பட்டதற்கு சிஐடியு செயலாளர் தங்க மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிஐடியு துணை செயலாளரும், கட்டுமான சங்க மாவட்ட துணை செயலாளரும், திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான சகாய ஆண்டனி கடந்த அக். 7ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத நபர்களால் தலையில் கடுமையாக தாக்கப்பட்டார்.
இதில் படுகாயமடைந்த அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தாக்கியவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட சிஐடியு சார்பில் இந்த கொடூர செயலை கண்டித்தும், இச்செயலை செய்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட சிஐடியு செயலாளர் தங்க மோகன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் சகாய ஆண்டனியை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க: பாண்டிகோயிலில் நிகழ்ந்த கொடூர கொலை! குற்றவாளிகளை தேடுகிறது போலீஸ்!