உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் மிக முக்கியமானது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள குமரி ஆகும். இங்கு கடலில் அதிகாலையில் சூரியன் உதிப்பதையும் மாலையில் சூரியன் மறைவதையும் காண்பதற்காகவே உள்ளூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குமரிக்கு தினந்தோறும் வருகைதருவார்கள்.
குமரியின் சிறப்புகள்
மேலும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றையும் சுற்றுலா படகில் சென்று கண்டு ரசிப்பது குமரியின் சிறப்பு அம்சமாகும். இந்நிலையில் இன்று (டிச. 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு தொடர் விடுமுறை என்பதாலும் குமரி சுற்றுலாத் தலத்திற்கு உள்ளூர் வெளியூர்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அதிகாலை முதலே வருகைதந்து இருந்தார்கள். இவர்கள் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் மண்டபத்திற்கும் அருகில் கடலில் சூரியன் உதயமாகும் அற்புத இயற்கை நிகழ்வை பரவசத்துடன் கண்டு ரசித்தார்கள்.
மேலும் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் குளித்தும், பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனமும் செய்தார்கள். கடற்கரைப் பகுதிகளில் அமைந்துள்ள கடைகளுக்குச் சென்று பாசி சங்கு போன்ற கடல் பொருள்களை வாங்கிச் சென்றார்கள். குமரிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்துள்ளது குமரி வியாபாரிகளிடையே மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ’உத்தரவுகளை மதிக்காத ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டும்’ - நீதிபதி கருத்து!