கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 275க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றன. விசைப்படகு மீனவர்கள் உள்பட பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடி துறைமுகத்தைச் சார்ந்து வாழ்ந்துவருகின்றனர்.
இந்தத் துறைமுகத்திலிருந்து அதிகாலை விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீன்களைப் பிடித்து அன்று இரவே துறைமுகம் கொண்டு வந்து துறைமுகத்தில் வைத்தே மீன்கள் ஏலம் விடப்படும். இதனால் தினமும் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் இரவு நேரங்களில் கூட்டமாகக் காணப்படும்.
இந்நிலையில், கடலிலிருந்து பிடித்து வரப்படும் மீன்களை விசைப்படகில் இருந்து துறைமுகத்தில் இறக்கும் பணியில் ஈடுபட்டு வந்த வழுக்கம்பாறை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய தொழிலாளி ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது இன்று (ஜூன்25) கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாளை (ஜூன்26) முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதற்கு தடை விதித்ததோடு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) வரை மீன்பிடி துறைமுகமும் தற்காலிகமாக மூடப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...சென்னையில் இன்று மட்டும் கரோனாவுக்கு 19 பேர் உயிரிழப்பு!