சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தளமாக கொண்டு இப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் விசைப்படகுகளில் மீன்பிடித்தொழில் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் சின்னமுட்டம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகுகள் நெல்லை மாவட்டம் கூட்டப்பள்ளி, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல் ஆகிய பகுதிகளில் வந்து மீன்பிடிப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி அந்த மீனவ கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுமார் 150 நாட்டுப்படகுளில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக பகுதியை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது அவர்களை கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும காவலர்களும் கன்னியாகுமாரி காவலர்களும் நடுக்கடலில் தடுத்து நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்பினர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக விசைப்படகு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சின்னமுட்டம் துறைமுக வளாகக் கூட்டத்தில் கூடி விவாதித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் செயலாளர் ரெஜீஸ் தெரிவிக்கையில், ‘நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் எங்கள் மீது தாக்கல் நடத்தவும், எங்கள் விசைப்படகுகளை தீயிட்டு கொளுத்தவும் 150க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் அரிவாள், ஈட்டி, வேல்கம்பு, கையெறிகுண்டு போன்ற ஆயுதங்களுடன் வந்தனர்.
அவர்களை காவலர்கள் நடுக்கடலில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிவிட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்’ என்றார்.
இதையும் படிங்க: சின்னமுட்டம் மீனவர்களுக்கு விரைவில் நற்செய்தி!- ராஜேந்திர பாலாஜி