கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார், உடல்நலக் குறைவால் அண்மையில் காலமானார். இதனால், கன்னியாகுமரி தொகுதி காலியாக உள்ளது என்ற விவரத்தை, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு, தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தி உள்ளார்.
தேர்தல் விதிமுறைகளின்படி காலியாக உள்ள தொகுதிக்கு, ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். திமுக எம்எல்ஏ, காத்தவராயன், கே.பி.பி. சாமி எம்எல்ஏ மறைவையொட்டி குடியாத்தம், திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக உள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு ஆறு மாதங்களுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாக சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்த ஆணையம் உத்தரவிட்டால் அதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும், ஆனாலும் இந்தத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்ப்பது போன்ற பணிகளை தொடங்கிவிட்டதாகவும், தேர்தல் தேதி அறிவித்தாலும் தயார்நிலையில் இருப்பதாகவும், தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் சாகு குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தலைமைத் தேர்தல் அலுவலர், வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது இந்தக் கரோனாவால் உயிரிழந்தவர்களின் பட்டியலை மாநகராட்சியே வழங்கலாம், இல்லை வழக்கம்போல் விண்ணப்பம் 7-ஐப் பூர்த்திசெய்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலிலிருந்து பெயரை நீக்கலாம் எனவும் தெரிவித்தார்.