கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் சகாயதாஸ் (50). இவர் அதிகாலை தனது இரண்டு மகள், மகன், உறவினர் உள்பட எட்டு நபர்களுடன் நாகர்கோவிலில் உள்ள தேவாலயத்திற்கு கூட்டு பிரார்த்தனைக்காக, மார்த்தாண்டம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் தனது டாட்டா சுமோ வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார்.
வாகனம் தக்கலை அருகே சுவாமியார்மடம் பகுதியில் வரும் போது எதிரே அதிவேகமாக வந்த காய்கறி ஏற்றி வந்த லாரி சகாயதாஸ் வாகனத்தின் மேல் மோதியது. இதில் கார் உருக்குலைந்தது. அதில் இருந்த எட்டு பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் அதிருஷ்டவசமாக அனைவரும் படுகாயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ரவிச்சந்திரன், லாரியை நிறுத்தாமல் தப்பிச் சென்றார். இதனைத் தொடர்ந்து தக்கலை காவல் துறையினர் லாரியை பறிமுதல் செய்து டிரைவர் ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
இந்நிலையில் விபத்து குறித்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் கார் முற்றிலுமாக சேதமடைந்த நிலையில், அந்தக் காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தைகள் தாய் தந்தையை பார்த்து கதறி அழும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.
இதையும் படிங்க...ஹேமந்த் சோரன் மீதான பாலியல் வன்புணர்வு வழக்கு; காவல்துறைக்கு மகளிர் ஆணையம் கடிதம்